YouVersion Logo
Search Icon

எசேக் 5

5
அத்தியாயம் 5
இஸ்ரவேலின் பாவங்களுக்கு எதிரான சாபம்
1பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும். 2மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றுகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே நெருப்பால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றவேண்டும்; அவைகளின் பின்னாக நான் வாளை உருவுவேன். 3அதில் கொஞ்சம்மட்டும் எடுத்து, அதை உன்னுடைய ஆடையின் ஓரங்களில் முடிந்துவைக்கவேண்டும். 4பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரி; அதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் எதிராக அக்கினி புறப்படும். 5யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது. 6அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள். 7ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளைவிட அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என்னுடைய கட்டளைகளிலே நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியோ நடக்காமலும் போனபடியினாலே, 8இதோ, நான், நானே உனக்கு எதிராக வந்து, அந்நியஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, 9நான் முன்பு செய்யாததும் இனிச் செய்யாமல் இருப்பதுமான விதமாக உனக்கு உன்னுடைய எல்லா அருவருப்புகளுக்காகவும் செய்வேன். 10ஆதலால் உன்னுடைய நடுவிலே தகப்பன்மார்கள் பிள்ளைகளைச் சாப்பிடுவார்கள்; பிள்ளைகள் தகப்பன்மார்களைச் சாப்பிடுவார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாக இருப்பவர்களையெல்லாம் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11ஆதலால், சீ என்று இகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன்னுடைய கிரியைகளால் நீ என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினதால் என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகச்செய்வேன், நான் இரங்கமாட்டேன், இதை என்னுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். 12உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் மரணமடைவார்கள், பஞ்சத்தாலும் உன்னுடைய நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்து, அவர்கள் பின்னே வாளை உருவுவேன். 13இப்படி என்னுடைய கோபம் நிறைவேறும்; இப்படி நான் என்னுடைய உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கச்செய்வதால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, யெகோவாகிய நான் என்னுடைய வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள். 14கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன். 15நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாக இருக்கும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். 16உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கு ஏதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கச்செய்து, உங்களுடைய அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். 17பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமல் போகச்செய்து காட்டுமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; வாளை நான் உன்மேல் வரச்செய்வேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

Currently Selected:

எசேக் 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in