YouVersion Logo
Search Icon

யாத் 23

23
அத்தியாயம் 23
நீதி மற்றும் இரக்கத்தின் சட்டங்கள்
1“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. 2தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே. 3வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே.
4உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு. 5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
6உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே. 7தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். 8லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக்#23:8 அதிகாரிகளை குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். 9அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
ஓய்வுநாளின் கட்டளை
10ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். 11ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும். 12ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு. 13நான் உங்களுக்குச் சொன்னவைகள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அந்நிய தெய்வங்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன்னுடைய வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
வருடத்தின் மூன்று பண்டிகைகள்
யாத் 34:18-26; உபா 16:9-17
14வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி. 15புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம். 16நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. 17வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும்.
18எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம். 19உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
வழியை ஆயத்தம் செய்வதற்கான தேவதூதன்
20வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். 21அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில்#23:21 என்னுடைய முழு அதிகாரத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறேன் இருக்கிறது. 22நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன். 23என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். 24நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும். 25உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். 26கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன். 27எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன். 28உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். 29தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல், 30நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன். 31செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். 32அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. 33உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.

Currently Selected:

யாத் 23: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in