YouVersion Logo
Search Icon

அப் 26

26
அத்தியாயம் 26
1அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான். 2அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். 3விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 4நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள். 5நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். 6தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன். 7இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். 8தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? 9முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 10அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன். 11எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். 12இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது, 13மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். 14நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 15அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. 16இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். 17உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி, 18அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 19ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை. 20முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். 21இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள். 22ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன். 23தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். 24இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 25அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். 26இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. 27அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். 28அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான். 29அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 30இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, 31தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 32அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.

Currently Selected:

அப் 26: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in