YouVersion Logo
Search Icon

2 சாமு 14

14
அத்தியாயம் 14
அப்சலோம் எருசலேமிற்குத் திரும்புதல்
1ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு, 2அவன் தெக்கோவா பட்டணத்தில் இருக்கிற புத்தியுள்ள ஒரு பெண்ணை அழைத்து: நீ துக்கம் கொண்டாடுகிறவளைப்போல, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, எண்ணெய் பூசாமல், இறந்து போனவனுக்காக அநேகநாட்கள் துக்கம் கொண்டாடுகிற பெண்ணைப்போலக் காண்பித்து, 3ராஜாவிடம் போய், அவரை நோக்கி: இவ்வாறாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளிடம் சொன்னான். 4அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள். 5ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான். 6உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான். 7வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள். 8ராஜா அந்தப் பெண்ணைப் பார்த்து: நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, உன்னுடைய காரியத்தைக் குறித்து கட்டளை கொடுப்பேன் என்றான். 9பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள். 10அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான். 11பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் தீங்கு செய்து, என்னுடைய மகனை அழிக்கப் பெருகாதபடி, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் மகனுடைய தலைமுடியில் ஒன்றும் தரையில் விழுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 12அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான். 13அப்பொழுது அந்தப் பெண்: பின்னே ஏன் தேவனுடைய மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்தப்பட்ட தம்முடைய மகனை ராஜா திரும்ப அழைக்காததாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார். 14நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடி, தரையிலே சிந்தப்படுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்தப்பட்டவன் முழுவதும் தம்மைவிட்டு விலக்க முடியாமலிருக்கும் நினைவுகளை நினைக்கிறார். 15இப்பொழுதும் நான் என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவோடு இந்த வார்த்தையைப் பேசவந்த காரணம் என்னவென்றால்: மக்கள் எனக்குப் பயமுண்டாக்கியதால், நான் ராஜாவோடு பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளான நான் நினைத்ததாலும் வந்தேனே தவிர வேறொன்றுமில்லை. 16என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார். 17ராஜாவான என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று உமது அடியாளான நான் நினைத்தேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மோடு இருக்கிறார் என்றாள். 18அப்பொழுது ராஜா அந்தப் பெண்ணுக்கு பதிலாக: நான் உன்னிடம் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவான என்னுடைய ஆண்டவர் சொல்லட்டும் என்றாள். 19அப்பொழுது ராஜா: இதற்கெல்லாம் யோவாப் உனக்கு உதவியாக இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னவைகளைவிட்டு வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் முடியாது என்று ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலிருந்து சொல்ல வைத்தான். 20நான் இந்தக் காரியத்தை விளக்கிப் பேசுவதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாக இருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள். 21அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான். 22அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான். 23பின்பு யோவாப் எழுந்து, கெசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமிற்கு அழைத்துக்கொண்டு வந்தான். 24ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான். 25இஸ்ரவேலர்கள் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் அழகுள்ளவனும் புகழப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை அவனில் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது. 26அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல்#14:26 2. கிலோ 300 கிராம்ஸ் எடையாக இருக்கும். 27அப்சலோமுக்கு மூன்று மகன்களும், தாமார் என்னும் பெயர்கொண்ட ஒரு மகளும் பிறந்தார்கள்; இவள் மிக அழகான பெண்ணாக இருந்தாள். 28அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான். 29ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான். 30அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள். 31அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான். 32அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கெசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
அப்சலோம் தாவீது ராஜாவை சந்தித்தல்
33யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

Currently Selected:

2 சாமு 14: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in