YouVersion Logo
Search Icon

2 சாமு 13

13
அத்தியாயம் 13
அம்னோனும் தாமாரும்
1இதற்குப்பின்பு தாவீதின் மகனான அப்சலோமிற்குத் தாமார் என்னும் பெயருள்ள அழகான ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் மகன் அம்னோன் ஆசை வைத்தான். 2தன்னுடைய சகோதரியான தாமாருக்காக கவலையோடு இருந்து வியாதிப்பட்டான்; அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள்; அவளுக்குத் தீங்குசெய்ய, அம்னோனுக்கு வருத்தமாக இருந்தது. 3அம்னோனுக்குத் தாவீதினுடைய சகோதரன் சிமியாவின் மகனான யோனதாப் என்னும் பெயருள்ள ஒரு நண்பன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரமுள்ளவன். 4அவன் இவனைப் பார்த்து: ராஜாவின் மகனான நீ, நாளுக்குநாள் எதனால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என்னுடைய சகோதரன் அப்சலோமின் சகோதரியான தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். 5அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதியுள்ளனைப்போல உன்னுடைய படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்ப்பதற்கு உன்னுடைய தகப்பனார் வரும்போது, நீ என்னுடைய சகோதரியான தாமார் வந்து, எனக்கு உணவு கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படி நான் பார்க்க, என்னுடைய கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்து அவளை அனுப்பும் என்று சொல் என்றான். 6அப்படியே அம்னோன் வியாதியுள்ளவன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என்னுடைய சகோதரியான தாமார் வந்து நான் அவளுடைய கையினாலே சாப்பிடும்படி, என்னுடைய கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைச் செய்யும்படி அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். 7அப்பொழுது தாவீது; தாமாரின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமாரிடம் நீ உன்னுடைய சகோதரனான அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் செய்துகொடு என்று சொல்லச்சொன்னான். 8தாமார் தன்னுடைய சகோதரனான அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவனுடைய கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, 9பாத்திரத்தை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லோரும் அவனைவிட்டு வெளியே போனார்கள். 10அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன்னுடைய கையினாலே சாப்பிடும்படி, அந்தப் பலகாரத்தை என்னுடைய அறைக்கு கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை வீட்டின் அறையில் இருக்கிற தன்னுடைய சகோதரனான அம்னோனிடத்தில் கொண்டுபோனாள். 11அவன் சாப்பிடும்படி அவள் அவைகளைக் அருகில் கொண்டுவரும்போது, அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடு உறவுகொள் என்றான். 12அதற்கு அவள்: வேண்டாம், என்னுடைய சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யக்கூடாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம். 13நான் இந்த வெட்கத்தோடு எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவுடன் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். 14அவன் அவளுடைய சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளோடு உறவுகொண்டான். 15அதன்பின்பு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைவிட, அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாக இருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடு சொன்னான். 16அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைவிட, இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற இந்த அநியாயம் கொடுமையாக இருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவளுடைய சொல்லைக் கேட்க மனமில்லாமல், 17தன்னிடத்தில் வேலைசெய்கிற தன்னுடைய வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டு என்றான். 18அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள். 19அப்பொழுது தாமார்: தன்னுடைய தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் அணிந்திருந்த பலவர்ணமான ஆடையைக்கிழித்து, தன்னுடைய கையைத் தன்னுடைய தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள். 20அப்பொழுது அவள் சகோதரனான அப்சலோம் அவளைப் பார்த்து: உன்னுடைய சகோதரனான அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என்னுடைய சகோதரியே, நீ மவுனமாக இரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தச் சம்பவத்தை உன்னுடைய மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன்னுடைய சகோதரனான அப்சலோமின் வீட்டில் தனியாக மனவேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள். 21தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான். 22அப்சலோம் அம்னோனோடு நன்மையோ தீமையோ பேசவில்லை; தன்னுடைய சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்ததினால் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
அம்னோனை அப்சலோம் கொலைசெய்தல்
23இரண்டு வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜாவின் மகன்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்தான். 24அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 25ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என்னுடைய மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிக செலவு உண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனமில்லாமல், அவனை ஆசீர்வதித்தான். 26அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான். 27அப்சலோம் பின்பும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியால், அவன் அம்னோனையும், ராஜாவின் மகன்கள் அனைவரையும் அவனோடு போகவிட்டான். 28அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான். 29அப்சலோம் கட்டளையிட்டபடியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜாவின் மகன்கள் எல்லோரும் எழுந்து, அவரவர்கள் தங்களுடைய கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள். 30அவர்கள் வழியில் இருக்கும்போதே, அப்சலோம் ராஜாவின் மகன்கள் எல்லோரையும் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீதியாக இருக்கவிடவில்லை என்று, தாவீதுக்குச் செய்தி வந்தது. 31அப்பொழுது ராஜா எழுந்து, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவனுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். 32அப்பொழுது தாவீதின் சகோதரனான சிமியாவின் மகன் யோனதாப் வந்து: ராஜாவின் மகன்களான வாலிபர்களையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என்னுடைய ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மட்டும் இறந்துபோனான்; அவன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் மனதில் இருந்தது. 33இப்போதும் ராஜாவின் மகன்கள் எல்லோரும் இறந்தார்கள் என்கிற பேச்சை ராஜாவான என்னுடைய ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே இறந்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான். 34இரவுக்காவலன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேக மக்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாக வருகிறதைக் கண்டான். 35அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவின் மகன்கள் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான். 36அவன் பேசி முடிந்தபோது, ராஜாவின் மகன்கள் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா வேலைக்காரர்களும் மிகவும் புலம்பி அழுதார்கள். 37அப்சலோமோ அம்மீயூதின் மகனான தல்மாய் என்னும் கெசூரின் ராஜாவினிடமாக ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன்னுடைய மகனுக்காக துக்கப்பட்டுக்கொண்டிருந்தான். 38அப்சலோம் கெசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான். 39தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.

Currently Selected:

2 சாமு 13: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in