YouVersion Logo
Search Icon

2 இராஜா 7

7
அத்தியாயம் 7
1அப்பொழுது எலிசா: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 2அப்பொழுது ராஜாவிற்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரி ஒருவன் தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
அசீரியர்கள் பயந்து ஓடிப்போகுதல்
3தொழுநோயாளிகளான நான்குபேர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து ஏன் சாக வேண்டும்? 4பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, 5சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. 6ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி, 7இரவிலே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், முகாமையும் அவைகள் இருந்த விதமாகவே விட்டுவிட்டு, தங்கள் உயிர் தப்ப ஓடிப்போனார்கள். 8அந்தத் தொழுநோயாளிகள், முகாமின் அருகில் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, 9பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியும்வரை காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். 10அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியர்களின் முகாமிற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனிதனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கழுதைகளும், கூடாரங்களும் இருந்த விதமாகவே இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். 11அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு அதை அறிவித்தார்கள். 12அப்பொழுது இராஜா இரவில் எழுந்து, தன் வேலைக்காரர்களை நோக்கி: சீரியர்கள் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்றான். 13அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்திரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். 14அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான். 15அவர்கள் யோர்தான்வரை அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர்கள் அவசரமாக ஓடும்போது, அவர்கள் எறிந்துபோட்ட உடைகளும் பொருட்களும் வழி முழுவதும் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவிற்கு அதை அறிவித்தார்கள். 16அப்பொழுது மக்கள் புறப்பட்டு, சீரியர்களின் முகாமைக் கொள்ளையிட்டார்கள்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே, எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. 17ராஜா தனக்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரியை பட்டணத்தின் நுழைவாயிலில் கண்காணிக்கக் கட்டளையிட்டிருந்தான்; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததாலே, ராஜா தேவனுடைய மனிதனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே அவன் இறந்துபோனான். 18பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியா பட்டணத்தின் நுழைவாயிலில் விற்கும் என்று தேவனுடைய மனிதன் ராஜாவோடே சொன்னபடியே நடந்தது. 19அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே. 20அப்படியே அவனுக்கு நடந்தது; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே அவன் இறந்துபோனான்.

Currently Selected:

2 இராஜா 7: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in