YouVersion Logo
Search Icon

1 சாமு 10

10
அத்தியாயம் 10
சாமுவேல் சவுலை அபிஷேகித்தல்
1அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல்#10:1 இஸ்ரவேல் மக்கள் மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா? 2நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையான செல்சாகில் ராகேலின் கல்லறைக்கு அருகில் இரண்டு மனிதர்களைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளைப்பற்றிய கவலையைவிட்டு, உங்களுக்காக கவலைப்பட்டு, என் மகனுக்காக என்ன செய்வேன்? என்கிறான் என்று சொல்வார்கள். 3நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து, 4உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். 5பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். 6அப்பொழுது யெகோவாவுடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய். 7இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார். 8நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படி, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்கும்வரை, ஏழு நாட்கள் காத்திரு என்றான்.
சவுல் தீர்க்கதரிசிகளைப்போல மாறுதல்
9அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது. 10அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். 11அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்கிறதைப் பார்த்தபோது: கீசின் மகனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள். 12அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது. 13அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். 14அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவனுடைய வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்கும் காணாததால், சாமுவேலிடத்திற்குப் போனோம் என்றான். 15அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். 16சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
சவுலை ராஜாவாக சாமுவேல் அறிவித்தல்
17சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் வரவழைத்து, 18இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த, உங்களை எகிப்தியர்களின் கைக்கும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா ராஜாக்களின் கைக்கும் மீட்டுவிட்டேன். 19நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான். 20சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. 21அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படி அருகில் வரச்செய்தபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் மகனான சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் காணவில்லை. 22அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் பொருட்கள் வைக்கிற இடத்திலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று யெகோவா சொன்னார். 23அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் மக்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தார்கள். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். 24அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: யெகோவா தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். 25சாமுவேல் ராஜ்ஜிய முறையை மக்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி, யெகோவாவுக்கு முன்பாக வைத்து, மக்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 26சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதைத் தூண்டினாரோ, அவர்களும் அவனோடு போனார்கள். 27ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.

Currently Selected:

1 சாமு 10: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in