YouVersion Logo
Search Icon

1 இராஜா 5

5
அத்தியாயம் 5
சாலொமோன் ஆலயத்தைக் கட்ட ஆயத்தப்படுதல்
1சாலொமோனை அவனுடைய தகப்பன் இடத்தில் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன்னுடைய வேலைக்காரர்களை அவனிடம் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்கு எப்பொழுதும் நண்பனாக இருந்தான். 2அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி: 3என்னுடைய தகப்பனாகிய தாவீதின் எதிரிகளைக் யெகோவா அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரை, அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவரால் முடியாமலிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர். 4ஆனாலும் இப்பொழுதோ என்னுடைய தேவனாகிய யெகோவா எனக்கு எங்கும் இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை. 5ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன். 6ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுரு மரங்களை வெட்ட கட்டளை கொடும்; சீதோனியர்களைப்போல மரம்வெட்டும் வேலை தெரிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரர்களின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான். 7ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான மக்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள மகனைக் கொடுத்த யெகோவா இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி; 8ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். 9என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கி மத்திய தரைக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 10அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான். 11சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக 20,000 கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான். 12யெகோவா சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
13ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் வேலைக்கு 30,000 கூலியில்லா வேலைக்காரர்களைப் பிடித்தான். 14அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் 10,000 பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த கூலியில்லா ஆட்களின்மேல் தலைவனாக இருந்தான். 15சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் 70,000 பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் 80,000 பேர்களும், 16இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் 3,300 பேர்களும் இருந்தார்கள். 17வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையுயர்ந்ததுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான். 18ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிப்லி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

Currently Selected:

1 இராஜா 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in