YouVersion Logo
Search Icon

1 இராஜா 4

4
அத்தியாயம் 4
சாலொமோனின் அதிகாரிகளும் அதிபதிகளும்
1ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான். 2அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான். 3சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான். 4யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். 5நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான். 6அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான். 7ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள். 8அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான். 9தேக்கேரின் மகன், இவன் மாகாத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான். 10ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோக்கோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது. 11அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள். 12அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது. 13கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது. 14இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான். 15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான். 16ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான். 17பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான். 18ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான். 19ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.
சாலொமோனுக்கு ஒதுக்கப்பட்ட அனுதின உணவு
20யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். 21நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள். 22ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், 23கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும். 24நதிக்கு இந்த பக்கத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு காசாவரை உள்ளவைகள் எல்லாவற்றையும், நதிக்கு இந்தப்பக்கத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாக இருந்தது. 25சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள். 26சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். 27மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து, 28குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.
சாலொமோனின் ஞானம்
29தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார். 30சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது. 31அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது. 32அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. 33லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான். 34சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.

Currently Selected:

1 இராஜா 4: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in