1 கொரி 7
7
அத்தியாயம் 7
திருமணத்தைக்குறித்த போதனைகள்
1நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. 2ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். 3கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். 4மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 5உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள். 6இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். 7எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. 8திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும். 9ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது. 10திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது. 11பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது. 12மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 13அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 14ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். 15ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 16மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? 17தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன். 18ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. 19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம். 20அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும். 21அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய். 22கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான். 23நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள். 24சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும். 25அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். 26அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். 27நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. 28நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன். 29மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும், 30அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும், 31இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 32நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 33திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 34அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். 35இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். 36ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். 37ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். 38இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். 39மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். 40ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.
Currently Selected:
1 கொரி 7: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.