செப்பனியா 1:1-18

செப்பனியா 1:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூட கெம்மரீம் என்பவர்களின் பேரையும், வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர் பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும், கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன். கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள். அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன். அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும். கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

செப்பனியா 1:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன். “பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், நான் வாரிக்கொண்டு போவேன்” என யெகோவா அறிவிக்கிறார். “நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும் வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும் அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்; நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின் மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன். விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும் அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன். நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக, வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன். யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு, மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன். யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன். ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். யெகோவாவினுடைய பலியின் நாளில், நான் பிரபுக்களையும், இளவரசர்களையும், பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன். அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள். யெகோவா அறிவிக்கிறதாவது: அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும். எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள். அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் திராட்சை மதுவின் மண்டியைப்போல் இருக்கிறார்கள். அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், வீடுகள் உடைத்து அழிக்கப்படும். அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள். யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள். அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், தொல்லையும் அழிவுமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள். மப்பும் மந்தாரமுமான நாள். அரணான நகரங்களுக்கு எதிராகவும், மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள். மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால், நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்; அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள். அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும். அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும். யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றமாட்டாது.

செப்பனியா 1:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆமோனின் மகனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எசேக்கியாவின் மகனாகிய அமரியாவுக்கு மகனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் மகன் செப்பனியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம். தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும், வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும், யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன். யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். யெகோவாவுடைய பலியின் நாளிலே நான் அதிபதிகளையும் இளவரசர்களையும் வேறுதேசத்து ஆடைகளை அணிந்த அனைவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா அழிவின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார். மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள். அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன். அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். மனிதர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தபடியால், அவர்கள் குருடர்களைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்களுடைய இரத்தம் புழுதியைப்போல் ஊற்றப்படும்; அவர்களுடைய உடல்கள் எருவைப்போல் கிடக்கும். யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார்.

செப்பனியா 1:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் செப்பனியாவுக்குக் கொடுத்தச் செய்தி இது. செப்பனியா இச்செய்தியை யூதாவின் ராஜாவாகிய ஆமோனின் குமாரனான யோசியா ஆண்டபோது பெற்றான். செப்பனியா கூஷின் குமாரன். கூஷ் கெதலியாவின் குமாரன். கெதலியா ஆமரியாவின் குமாரன். ஆமரியா எஸ்கியாவின் குமாரன். கர்த்தர் கூறுகிறார், “நான் பூமியில் உள்ள எல்லாவற்றையும் அழிப்பேன். நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார். கர்த்தர், “நான் யூதாவையும், எருசலேமில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன். நான் அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் அகற்றுவேன். நான் பாகால் வழிபாட்டின் இறுதி அடையாளங்களை அகற்றுவேன். நான் ஆசாரியர்களையும் அகற்றுவேன். நான் நட்சத்திரங்களை வழிபடச் செல்ல கூரையின் மேல் செல்லும் ஜனங்களை அகற்றுவேன். ஜனங்கள் அப்பொய் ஆசாரியர்களை மறப்பார்கள். சில ஜனங்கள் என்னை ஆராதிப்பதாகச் சொல்கிறார்கள். அந்த ஜனங்கள் என்னை வழிபடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் பொய்த் தெய்வமான மல்காமை வழிபடுகின்றனர். எனவே, நான் அந்த ஜனங்களை அந்த இடத்திலிருந்து நீக்குவேன். சில ஜனங்கள் கர்த்தரிடமிருந்து விலகினார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டனர். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதை நிறுத்தினார்கள். எனவே, நான் அந்த இடத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவேன்” என்றார் எனது கர்த்தராகிய ஆண்டவர் முன்னால் அமைதியாயிரு. ஏனென்றால், கர்த்தருடைய நீயாயத்தீர்ப்பின் நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தர் பலியைத் தயாரித்திருக்கிறார். அவர் தனது அழைக்கப்பட்ட விருந்தினர்களை ஆயத்தப்படும்படிச் சொல்லியிருக்கிறார். கர்த்தர், “கர்த்தருடைய பலிநாளில், நான் ராஜாவின் குமாரர்களையும் மற்ற தலைவர்களையும் தண்டிப்பேன். நான் வேறு நாடுகளிலிருந்து வந்த துணிகளை அணிந்த ஜனங்களைத் தண்டிப்பேன். அந்த நேரத்தில், நான் வாசற்படியைத் தாண்டிய ஜனங்களையும் தண்டிப்பேன். நான் தம் அதிகாரியின் வீடுகளைப் பொய்களாலும், வன்முறையாலும் நிரப்புகிற ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார். கர்த்தரும், “அந்த வேளையில் எருசலேமில் மீன்வாசல் அருகே உள்ள ஜனங்கள் என்னிடம் உதவிக்கு அழைப்பார்கள். பட்டணத்தின் மற்றப் பகுதிகளில் உள்ள ஜனங்கள் அழுவார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பொருட்கள் அழிக்கப்படுகிற சத்தங்களை ஜனங்கள் கேட்பார்கள். பட்டணத்தின் தாழ்வான பகுதிகளில் வாழும் ஜனங்கள் அழுவார்கள். ஏனென்றால் எல்லா வியாபாரிகளும், பணக்காரர்களும் அழிக்கப்படுவார்கள். “அந்த வேளையில், நான் ஒரு விளக்கை எடுத்து எருசலேம் முழுவதும் தேடுவேன். நான் தம் வழியில் செல்வதில் திருப்தி காணும் ஜனங்களைக் கண்டு கொள்வேன். அந்த ஜனங்கள், ‘கர்த்தர் எதுவும் செய்வதிலை. அவர் உதவுவதில்லை! அவர் காயப்படுத்துவதில்லை!’ நான் அவர்களைக் கண்டு பிடித்து தண்டிப்பேன் என்று கூறுகின்றார். பிறகு மற்ற ஜனங்கள் அவர்களின் செல்வத்தை எடுத்துக்கொண்டு வீடுகளை அழிப்பார்கள். அந்த நேரத்தில், வீடுகட்டிய ஜனங்கள் அதில் வாழமாட்டார்கள். திராட்சை கொடிகளை நட்டவர்கள் அதன் ரசத்தைக் குடிக்கமாட்டார்கள். மற்ற ஜனங்கள் அவற்றைப் பெறுவார்கள்.” கர்த்தருடைய நியாயதீர்ப்பின் நாள் விரைவில் வரும். அந்த நாள் அருகாமையில் உள்ளது. விரைவில் வரும். கர்த்தருடைய நியாத்தீர்ப்பின் நாளில் ஜனங்கள் சோகக் குரல்களைப் கேட்பார்கள். வலிமையான வீரர்கள் கூட அழுவார்கள். தேவன் அந்நேரத்தில் தன் கோபத்தைக் காட்டுவார். அது பயங்கரமான துன்பங்களுக்குரிய நேரமாக இருக்கும். இது அழிவுக்கான நேரம்தான். இது இருண்ட கருத்த மேகமும், புயலுமுள்ள நாளாக இருக்கும். இது போருக்குரிய காலத்தைப் போன்றிருக்கும். ஜனங்கள் எக்காளம் மற்றும் பூரிகை சத்தங்களை கோபுரங்கள் மற்றும் பாதுகாப்புக்குரிய நகரங்களிலிருந்தும் கேட்பார்கள். கர்த்தர், “நான் ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமானதாகச் செய்வேன். ஜனங்கள் குருடர்களைப்போன்று எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஏராளமான ஜனங்கள் கொல்லப்படுவார்கள். அவர்களின் இரத்தம் தரையில் சிந்தும். அவர்களின் மரித்த உடல்கள் தரையில் சாணத்தைப் போன்றுக் கிடக்கும். அவர்களது பொன்னும், வெள்ளியும் அவர்களுக்கு உதவாது. அந்த நேரத்தில் கர்த்தர் எரிச்சலும், கோபமும் கொள்வார். கர்த்தர் உலகம் முழுவதையும் அழிப்பார். கர்த்தர் உலகில் உள்ள ஒவ்வொன்றையும் முழுவதுமாக அழிப்பார்” என்றார்.