சகரியா 8:1-6
சகரியா 8:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் உள்ள அன்பில் நான் வைராக்கியமாய் இருக்கிறேன்; அவளைக் குறித்த அன்பு வைராக்கியத்தினால் அவளுடைய பகைவருடன் கடுங்கோபமாயிருக்கிறேன்.” யெகோவா சொல்வது இதுவே: “நான் சீயோனுக்குத் திரும்பிவந்து எருசலேமில் குடிகொள்வேன். அப்பொழுது எருசலேம், சத்தியத்தின் நகரம் என்றும், சேனைகளின் யெகோவாவின் மலை, பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மறுபடியும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதுள்ள ஆண்களும், பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுடைய முதிர்வயதின் காரணமாக அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஊன்றுகோல் இருக்கும். நகர வீதிகள், விளையாடுகிற சிறுவர்களாலும், சிறுமிகளாலும் நிறைந்திருக்கும்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் இந்த மக்களில் மீதியாய் இருப்பவர்களுக்கு இவையெல்லாம் புதுமையாய்த் தோன்றும். எனினும் இவை என் பார்வையில் புதுமையானவை அல்ல” என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
சகரியா 8:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை உண்டாகி, அவர்: நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்செய்வேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய யெகோவாவின் மலை பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற வயதான ஆண்களும் பெண்களும் குடியிருப்பார்கள். நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த மக்களில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
சகரியா 8:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனை உண்மையாக நேசிக்கிறேன். அவள் என்னை விசுவாசிக்காதபோது நான் மிகவும் கோபங்கொள்ளும் அளவுக்கு அதிகமாக அவளை நேசித்தேன்.” கர்த்தர் கூறுகிறார், “நான் சீயோனுக்கு திரும்ப வந்திருக்கிறேன். நான் எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எருசலேம் விசுவாசமுள்ள நகரம் என்று அழைக்கப்படும். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய மலையானது பரிசுத்தமான மலை என அழைக்கப்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமின் பொது இடங்களில் வயதான ஆண்களும், பெண்களும் மீண்டும் காணப்படுவார்கள். ஜனங்கள் நீண்டகாலம் கைதடியின் தேவை வரும்வரை வாழ்வார்கள். நகரமானது தெருக்களில் விளையாடும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். தப்பிப் பிழைத்தவர்கள் இதனை ஆச்சரியமானது என்று நினைப்பார்கள். நானும் இதை ஆச்சரியமானது என்றே நினைப்பேன்!”
சகரியா 8:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்: நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள். நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.