சகரியா 11:13-17
சகரியா 11:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா என்னிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு” இதுவே எனக்கென அவர்கள் மதிப்பிட்ட மேன்மையான விலை! என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த குயவனிடத்தில் எறிந்துவிட்டேன். பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்துப் போட்டேன். அப்படியே யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும் குலைத்துவிட்டேன். அதன்பின் யெகோவா எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள். ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மேல் ஒரு மேய்ப்பனை எழும்பப் பண்ணுவேன். அவன் காணாமல் போவதைக் கவனிக்கவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றிற்கு உணவளித்துப் பராமரிக்கவோமாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியைத் தின்பான். “மந்தையைக் கைவிடுகிற பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ கேடு, அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும். அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும். அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”
சகரியா 11:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன். யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான். மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
சகரியா 11:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன். பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன். பிறகு கர்த்தர் என்னிடம், “மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள். இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார். ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே, நீ என் மந்தையைக் கைவிட்டாய். அவனைத் தண்டித்துவிடு. அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு. அவனது வலது கை பயனற்றுப்போகும். அவனது வலது கண் குருடாகும்.
சகரியா 11:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன். கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான். மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.