தீத்து 3:1-3
தீத்து 3:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
தீத்து 3:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும், ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து. ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம்.
தீத்து 3:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும், ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.
தீத்து 3:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு. கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம்.