தீத்து 2:1-5

தீத்து 2:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்; அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள்.

தீத்து 2:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.

தீத்து 2:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும். மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.

தீத்து 2:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.