தீத்து 2:1-15

தீத்து 2:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்; அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள். அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து. நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும். மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது. அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ, அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள். ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது. அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. நம்முடைய மகத்துவமான இறைவனும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து, மகிமையுடன் வெளிப்படும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்கு நாம் காத்திருக்கும்படி வாழ அந்த கிருபை கற்றுத்தருகிறது. எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார். இவையே நீ போதிக்கவேண்டிய காரியங்கள்; எல்லா அதிகாரத்துடனும் கண்டித்து, உற்சாகப்படுத்து. யாரும் உன்னை அவமதிக்க இடங்கொடாதே.

தீத்து 2:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு. அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி, நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக. வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி, தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு. ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது. நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக.

தீத்து 2:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும். மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது. அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர். அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க, முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும். நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது. நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார். நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார். மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.

தீத்து 2:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு. அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி, நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்