உன்னதப்பாட்டு 7:1-10

உன்னதப்பாட்டு 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது. உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது. உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது. உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார். மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது. நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது. நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.

உன்னதப்பாட்டு 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இளவரசனின் மகளே, பாதணி அணிந்த உன் பாதங்கள் எவ்வளவு அழகானவை! உன் தொடையின் வளைவுகள், கலைஞனின் கைவேலைப்பாடான நகைகள்போல் இருக்கின்றன. உனது தொப்புள் ஒருபோதும் திராட்சை இரசம் குறையாத வட்டமான கிண்ணம் போன்றது. உனது வயிறோ, லில்லியினால் சூழ்ந்துள்ள கோதுமைக் குவியல் போன்றது. உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது. உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள எஸ்போனின் குளங்களைப் போன்றவை. உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள லெபனோனின் கோபுரம் போன்றது. உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான். மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள், எவ்வளவு இன்பமானவள்! உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது, உன் மார்பகங்கள் பழக்குலைகள் போன்றது. “நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்; அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன். உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக, உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக, உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது. அது உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையில் மெதுவாய் இறங்கும் இனிமையான திராட்சை இரசம்போல் இருக்கிறது. நான் என் காதலருக்கே உரியவள், அவரின் ஆசை என்மேலேயே உள்ளது.

உன்னதப்பாட்டு 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது. உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது. உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார். மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள். உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.

உன்னதப்பாட்டு 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது. உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது. உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன. உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன. உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது. உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது. உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது. உன் நீண்ட அசையும் கூந்தலானது ராஜாவையும் சிறைபிடிக்கவல்லது. நீ மிகவும் அழகானவள். நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள். நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி. நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன. நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக. உன் வாய் என் அன்பிற்குள் நேராக இறங்கும் தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக. நான் என் நேசருக்கு உரியவள். அவருக்கு நான் தேவை.