உன்னதப்பாட்டு 5:5-16

உன்னதப்பாட்டு 5:5-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை. நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள். எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன். ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்.

உன்னதப்பாட்டு 5:5-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன், என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது; கதவின் பிடியில் என் கைவிரல்கள் வெள்ளைப்போளத்தைச் சிந்தின. நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார். அதினால் என் உள்ளம் ஏங்கியது. நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை. நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை. காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, என்னைக் கண்டார்கள். அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர், என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்; அவர்கள் அரணைக் காவல் செய்வோர்! எருசலேம் மங்கையரே, நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்; நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்? காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள். பெண்களுள் பேரழகியே, உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? என் காதலர் பிரகாசமான சிவந்த தோற்றமுள்ளவர், பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர். அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது; தலைமயிரோ சுருள் சுருளாகவும் காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது. அவருடைய கண்களோ பாலில் குளித்து, நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும், பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன. அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் பாத்திகள்போல் இருக்கின்றன. அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன. அவருடைய புயங்களோ கோமேதகம் பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன. அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட, துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது. அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால் அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன. அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும் அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது. அவருடைய வாய் இனிமையானது; அவர் முற்றிலும் அழகானவர். எருசலேமின் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்.

உன்னதப்பாட்டு 5:5-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை. நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள். எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள் பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது. அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது. அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.

உன்னதப்பாட்டு 5:5-16 பரிசுத்த பைபிள் (TAERV)

என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன். என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது. என் நேசருக்காகத் திறந்தேன் ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை. அவர் வந்துபோனபோது நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன். நான் அவரைத் தேடினேன் ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நான் அவரை அழைத்தேன் ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர். அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள் என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர். எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள். அழகான பெண்ணே, உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா? என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர். பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர். அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும். அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும். அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும். அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும். பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும், பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும். அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும். அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும். அவரது உடல் மென்மையான தந்தம். இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும். அவரது கால்கள் பளிங்குத் தூண்கள் பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும். அவர் நின்றால் லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும். ஆம், எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர். அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது. இப்படிப்பட்டவரே என் நேசர் இத்தகையவரே என் நேசர்.