உன்னதப்பாட்டு 4:8-14

உன்னதப்பாட்டு 4:8-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, லெபனோனில் இருந்து என்னுடன் வா. அமனா மலைச் சிகரத்திலிருந்தும், சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும், சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா. என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; உன் கண்களின் ஒரு பார்வையினாலே, உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது; உனது வாசனைத் தைலத்தின் நறுமணம் எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது! என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன. உன் உடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது. என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு. மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; அங்கே சிறந்த கனிகளுண்டு, மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு. அங்கே நளதம், குங்குமம், வசம்பு, இலவங்கம், எல்லாவித நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் சந்தனமும், எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது.

உன்னதப்பாட்டு 4:8-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா. என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய். உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.

உன்னதப்பாட்டு 4:8-14 பரிசுத்த பைபிள் (TAERV)

என்னோடு வா, என் மணமகளே லீபனோனிலிருந்து என்னோடு வா. அமனா மலையின் உச்சியிலிருந்து வா. சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும், சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா. என் அன்பே! என் மணமகளே! என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால், உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய். என் அன்பே, என் மணமகளே, உன் அன்பு மிக அழகானது. உன் அன்பு திராட்சைரசத்தைவிடச் சிறந்தது. உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது. என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது. உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது. உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது. என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள். நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும், பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும், அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய். உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும் மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம். குங்குமம், வசம்பு, லவங்கம், தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன.

உன்னதப்பாட்டு 4:8-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார். என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய். உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய். உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.