உன்னதப்பாட்டு 4:1-7

உன்னதப்பாட்டு 4:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்; முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்; உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; உன் வாய் அழகானது. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன; அவைகளெல்லாம் போர் வீரர்களுடைய ஆயுதங்களே. உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, அவை லில்லிகள் நடுவில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. பொழுது சாய்வதற்குள், நிழல் மறைவதற்குள், நான் வெள்ளைப்போள மலைக்கும், சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன். என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; உன்னில் குறைபாடு எதுவும் இல்லை.

உன்னதப்பாட்டு 4:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது. உன்னுடைய பற்கள், ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது. உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னில் குறையொன்றும் இல்லை.

உன்னதப்பாட்டு 4:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

என் அன்பே! நீ அழகானவள். ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன. உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடனமாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தைபோல அசைந்துகொண்டிருக்கிறது. உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. உனது வாய் அழகானது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன. உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது. அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும், நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன். என் அன்பே, முழுவதும் நீ அழகானவள் உனக்கு எதிலும் குறைவில்லை.

உன்னதப்பாட்டு 4:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது. உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது. உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.