உன்னதப்பாட்டு 4:1-15
உன்னதப்பாட்டு 4:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது. உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது. உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார். என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய். உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய். உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது. தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
உன்னதப்பாட்டு 4:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்; முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்; உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; உன் வாய் அழகானது. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன; அவைகளெல்லாம் போர் வீரர்களுடைய ஆயுதங்களே. உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, அவை லில்லிகள் நடுவில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. பொழுது சாய்வதற்குள், நிழல் மறைவதற்குள், நான் வெள்ளைப்போள மலைக்கும், சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன். என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; உன்னில் குறைபாடு எதுவும் இல்லை. லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, லெபனோனில் இருந்து என்னுடன் வா. அமனா மலைச் சிகரத்திலிருந்தும், சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும், சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா. என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; உன் கண்களின் ஒரு பார்வையினாலே, உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது; உனது வாசனைத் தைலத்தின் நறுமணம் எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது! என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன. உன் உடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது. என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு. மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; அங்கே சிறந்த கனிகளுண்டு, மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு. அங்கே நளதம், குங்குமம், வசம்பு, இலவங்கம், எல்லாவித நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் சந்தனமும், எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது. நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, ஜீவத்தண்ணீரின் கிணறு, லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை.
உன்னதப்பாட்டு 4:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது. உன்னுடைய பற்கள், ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது. உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னில் குறையொன்றும் இல்லை. லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா. என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய். உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது. தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. மணவாளி
உன்னதப்பாட்டு 4:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
என் அன்பே! நீ அழகானவள். ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன. உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடனமாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தைபோல அசைந்துகொண்டிருக்கிறது. உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. உனது வாய் அழகானது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன. உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது. அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும், நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன். என் அன்பே, முழுவதும் நீ அழகானவள் உனக்கு எதிலும் குறைவில்லை. என்னோடு வா, என் மணமகளே லீபனோனிலிருந்து என்னோடு வா. அமனா மலையின் உச்சியிலிருந்து வா. சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும், சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா. என் அன்பே! என் மணமகளே! என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால், உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய். என் அன்பே, என் மணமகளே, உன் அன்பு மிக அழகானது. உன் அன்பு திராட்சைரசத்தைவிடச் சிறந்தது. உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது. என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது. உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது. உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது. என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள். நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும், பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும், அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய். உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும் மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம். குங்குமம், வசம்பு, லவங்கம், தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன. நீ தோட்டத்து நீரூற்று போன்றவள் சுத்தமான தண்ணீருள்ள கிணறும், லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.