உன்னதப்பாட்டு 2:14-17
உன்னதப்பாட்டு 2:14-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே, உன் முகத்தை எனக்குக் காட்டு, உனது குரலை நான் கேட்கட்டும்; உன் குரல் இனிமையானது, உன் முகம் அழகானது. நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் பூத்திருக்கின்றன, அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும் குள்ளநரிகளையும் நமக்காகப் பிடியுங்கள். என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். என் காதலரே, பொழுது விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள் திரும்பி வாரும், குன்றுகளில் உள்ள மானைப்போலவும், மரைக்குட்டியைப் போலவும் திரும்பி வாரும்.
உன்னதப்பாட்டு 2:14-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார். திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே. மணவாளி என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
உன்னதப்பாட்டு 2:14-17 பரிசுத்த பைபிள் (TAERV)
“என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய். உன்னைப் பார்க்கவிடு, உன் குரலைக் கேட்கவிடு, உன் குரல் மிக இனிமையானது. நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார். திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும், குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள். நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன. என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள். பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும், நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார். என் அன்பரே திரும்பும், இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும், குட்டி மான்களைப் போலவும் இரும்.
உன்னதப்பாட்டு 2:14-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார். திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.