உன்னதப்பாட்டு 1:7-17

உன்னதப்பாட்டு 1:7-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்? அதை எனக்குச் சொல்லும். முகத்திரையிட்ட பெண்போல், ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்? பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு. என் அன்பே, நான் உன்னைப் பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன். காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை. நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகளைச் செய்வோம். அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது. என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார். என் காதலர் எனக்கு என்கேதி ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, மருதாணி பூங்கொத்து போன்றவர். என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள். என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! ஆ, எவ்வளவு கவர்ச்சி! நமது படுக்கை பசுமையானது. நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை, நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை.

உன்னதப்பாட்டு 1:7-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன் பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன். அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம். ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும். என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு. என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன் என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய படுக்கை பசுமையானது. நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.

உன்னதப்பாட்டு 1:7-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன். எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்? மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்? நான் உம்மோடு இருக்க வரவேண்டும். அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன். நீ எவ்வளவு அழகான பெண் என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும். மந்தையைப் பின்தொடர்ந்து போ. மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய். அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன. உனது கன்னங்கள் மிக அழகானவை. அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உனது கழுத்தும் மிக அழகானது. அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது வாசனைப்பொருளின் மணமானது கட்டிலின்மேல் இருக்கும் ராஜாவையும் சென்றடைகிறது. என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர். என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர். என் அன்பே, நீ மிகவும் அழகானவள். ஓ … நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை. என் நேசரே! நீரும் மிக அழகானவர் நீர் மிகவும் கவர்ச்சியானவர். நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது. நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை. நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.

உன்னதப்பாட்டு 1:7-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன். ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது. வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம். ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும். என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு. என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து. என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள். நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது. நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.