உன்னதப்பாட்டு 1:5-12

உன்னதப்பாட்டு 1:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமின் மங்கையரே, நான் கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன். நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது. என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்? அதை எனக்குச் சொல்லும். முகத்திரையிட்ட பெண்போல், ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்? பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு. என் அன்பே, நான் உன்னைப் பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன். காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை. நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகளைச் செய்வோம். அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது.

உன்னதப்பாட்டு 1:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன். நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன் பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன். அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம். ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.

உன்னதப்பாட்டு 1:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமின் குமாரத்திகளே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும், அழகாகவும் இருக்கிறேன். நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம். வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது. என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள். அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர். எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை. நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன். எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்? மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்? நான் உம்மோடு இருக்க வரவேண்டும். அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன். நீ எவ்வளவு அழகான பெண் என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும். மந்தையைப் பின்தொடர்ந்து போ. மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய். அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன. உனது கன்னங்கள் மிக அழகானவை. அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உனது கழுத்தும் மிக அழகானது. அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது வாசனைப்பொருளின் மணமானது கட்டிலின்மேல் இருக்கும் ராஜாவையும் சென்றடைகிறது.

உன்னதப்பாட்டு 1:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன். நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன். ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது. வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம். ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.