ரூத் 3:1-9

ரூத் 3:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் ரூத்தின் மாமியாராகிய நகோமி அவளிடம், “என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு ஒரு வாழ்க்கையைத் தேட வேண்டுமல்லவா? போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான். எனவே நீ குளித்து வாசனைத் தைலம் பூசி, உன்னிடத்திலுள்ள சிறந்த உடையை உடுத்திக்கொள். பின் நீ அந்த களத்திற்குப்போ. ஆனால் அவன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரை நீ அங்கிருப்பது அவனுக்குத் தெரியாதிருக்கட்டும். அவன் படுத்திருக்கிறபோது அவன் படுக்கும் இடத்தைக் கவனித்துக்கொள். அவன் படுத்தபின் நீ போய் போர்வையை விலக்கி அவன் கால்மாட்டில் படுத்துக்கொள்; பின்பு நீ என்ன செய்யவேண்டும் என்று அவனே உனக்குச் சொல்வான்” என்றாள். அதற்கு ரூத், “நீங்கள் எனக்குச் சொல்கிறபடி எல்லாம் நான் செய்வேன்” என்று சொன்னாள். அவ்வாறே அவள் சூடடிக்கும் களத்திற்குப் போய் தன் மாமியார் செய்யும்படி சொன்ன எல்லாவற்றையும் செய்தாள். போவாஸ் சாப்பிட்டு, குடித்து மிக மகிழ்ச்சியாயிருந்தான். அவன், தானியம் குவிந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் போய்ப்படுத்தான். அப்பொழுது ரூத் மெதுவாக அவனருகே போய் போர்வையை விலக்கி கால்மாட்டில் படுத்துக்கொண்டாள். நள்ளிரவில் ஏதோ ஒன்று அவனைத் திடுக்குறச் செய்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது, ஒரு பெண் தன் கால்மாட்டில் படுத்திருப்பதைக் கண்டான். உடனே அவன், “நீ யார்?” எனக் கேட்டான். “நான் உங்கள் அடியாளாகிய ரூத்; நீங்களே என்னை மீட்கும் உரிமையுடைய உறவினன்; ஆகையால் உங்கள் போர்வையின் தொங்கலை என்மேல் விரியுங்கள்” என்றாள்.

ரூத் 3:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ? நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு. அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள். போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள். நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாளின்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள்.

ரூத் 3:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது. அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான். நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு. அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள். பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள். எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள். உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள். நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான். அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.

ரூத் 3:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ? நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு. அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள். போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள். பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.