ரூத் 2:18-23

ரூத் 2:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ரூத் அதை எடுத்துக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பிப்போனதும் அவள் சேர்த்த தானியம் அதிகமாயிருப்பதை அவளுடைய மாமியார் கண்டாள். அத்துடன் ரூத் தான் திருப்தியாகச் சாப்பிட்டு, மீந்திருந்ததில் கொண்டுவந்ததைத் தன் மாமியிடம் கொடுத்தாள். அதைக்கண்ட ரூத்தின் மாமியார் அவளிடம், “எங்கே நீ இன்று கதிர் பொறுக்கினாய்? எங்கே வேலைசெய்தாய்? உன்னில் அக்கறைகாட்டிய அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்படுவானாக” என்றாள். அப்பொழுது ரூத் தன் மாமியாரிடம், தான் யாருடைய வயலில் வேலைசெய்தேன் என்பதைப் பற்றிச் சொன்னாள். “இன்று நான் வேலைசெய்த வயலின் உரிமையாளனின் பெயர் போவாஸ்” என்றும் சொன்னாள். நகோமி, “யெகோவா அவனை ஆசீர்வதிப்பாராக!” என்று சொல்லி தன் மருமகளிடம், “அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தயைகாட்டுவதை இன்னும் நிறுத்தவில்லை” என்றாள். மேலும் நகோமி, “அந்த மனிதன் எங்கள் நெருங்கிய உறவினன்; அவன் நம்மை மீட்கும் உரிமையுள்ள உறவினரில் ஒருவன்” என்றாள். அதற்கு மோவாபிய பெண்ணான ரூத், “அவர் என்னிடம், என்னுடைய வேலையாட்கள் தானியங்களை அறுவடை செய்து முடிக்கும்வரை நீ அவர்களுடன் தங்கியிரு எனவும் சொல்லியிருக்கிறார்” என கூறினாள். நகோமி தன் மருமகளான ரூத்திடம், “என் மகளே, நீ அவருடைய பணிப்பெண்களுடன் போவது உனக்கு நல்லது. ஏனெனில் வேறொருவருடைய வயல்களில் உனக்குத் தீங்கு நேரிடலாம்” என்றாள். எனவே ரூத், வாற்கோதுமை அறுவடை காலமும், கோதுமை அறுவடை காலமும் முடியும்வரை போவாஸின் பணிப்பெண்களுடனேயே தங்கினாள். அவள் தன் மாமியாருடனேயே வசித்தாள்.

ரூத் 2:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள். பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனிதர்கள் உன்னை எதிர்க்காதபடி நீ அவனுடைய வேலைக்காரிகளோடு போகிறது நல்லது என்றாள். அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள்.

ரூத் 2:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள். அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள். ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள். நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் ஒருவன்” என்றாள். பிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள். பிறகு நகோமி தன் மருமகளிடம், “அவனது பெண் வேலைக்காரிகளோடு சேர்ந்து வேலை செய்வது உனக்கும் நல்லது. நீ வேறு ஏதாவது வயலில் வேலை செய்தால், யாராவது உனக்குத் தொல்லை கொடுக்கக் கூடும்” என்றாள். எனவே ரூத், போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்து தொடர்ந்து வேலை செய்துவந்தாள். வாற் கோதுமையின் அறுவடை முடியும் வரை அவள் தானியத்தைச் சேகரித்து வந்தாள். கோதுமை அறுவடைக் காலம் முடியும்வரையும் அங்கு வேலைசெய்தாள். ரூத் தனது மாமியாரான நகோமியோடு தொடர்ந்து வாழ்ந்து வந்தாள்.

ரூத் 2:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள். பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள். அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.