ரூத் 1:3-8

ரூத் 1:3-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அங்கே நகோமியின் கணவன், எலிமெலேக் இறந்தான், அப்பொழுது நகோமி தன் இரண்டு மகன்களுடனும் தனித்து விடப்பட்டாள். நகோமியின் மகன்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். ஒருவன் ஒர்பாள் என்பவளையும், மற்றவன் ரூத் என்பவளையும் திருமணம் செய்தனர். அங்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வாழ்ந்தனர். அதன்பின் மக்லோன், கிலியோன் ஆகிய இருவரும் இறந்துபோனார்கள். இப்படியாக நகோமி தன் கணவனையும் தன் மகன்கள் இருவரையும் இழந்து தனியாக விடப்பட்டாள். யெகோவா தம் மக்களுக்கு உணவளித்து உதவி செய்கிறார் என்பதை நகோமி மோவாப் நாட்டில் இருக்கும்போது கேள்விப்பட்டாள். அப்பொழுது அவள் தன் இரு மருமகள்களுடன் அங்கிருந்து தனது நாட்டிற்குத் திரும்பிச்செல்வதற்கு ஆயத்தம் செய்தாள். அவள் தன் மருமகள்களான ஒர்பாள், ரூத் என்பவர்களுடன் தான் வசித்த நாட்டைவிட்டு புறப்பட்டு, யூதா நாட்டை நோக்கிப் போகும்படி புறப்பட்டாள். அப்பொழுது நகோமி தன் இரு மருமகள்களிடமும், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள். இறந்துபோன உங்கள் கணவர்களுக்கும், எனக்கும் நீங்கள் இரக்கம் காட்டியதுபோல் யெகோவா உங்களுக்கும் இரக்கம் காட்டுவாராக.

ரூத் 1:3-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள். இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள். யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது, நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக.

ரூத் 1:3-8 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு குமாரர்களும் மட்டுமே மீந்திருந்தார்கள். அவளது குமாரர்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், குமாரர்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள். மலைநாடான மோவாப்பில் நகோமி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தர் யூதாவில் தன் ஜனங்களுக்கு உணவு கொடுத்தார் என்று அறிந்தாள். எனவே நகோமியும் மலைநாடான மோவாபை விட்டுத் தன் சொந்த நாட்டிற்குப் போக முடிவு செய்தாள். அவளது மருமகள்களும் அவளோடு புறப்பட்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு யூதா நாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது குமாரர்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன்.

ரூத் 1:3-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்து வருஷம் வாசம்பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில், நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.