ரூத் 1:19-22

ரூத் 1:19-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள். இப்படி, நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

ரூத் 1:19-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம்வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, அவர்களைக்குறித்து பட்டணத்து மக்கள் எல்லோரும் பரபரப்படைந்தார்கள். பெண்களோ வியப்புற்று, “இவள் நகோமியாயிருக்குமோ?” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது அவள் அவர்களிடம், “நீங்கள் என்னை நகோமி, என்று அழைக்கவேண்டாம். என்னை மாரா என்றழையுங்கள். ஏனெனில் எல்லாம் வல்லவர் என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் யெகோவாவோ என்னை வெறுமையாகவே திருப்பிக் கொண்டுவந்துள்ளார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்கவேண்டும்? யெகோவா என்னைத் துன்புறுத்தினார். எல்லாம் வல்லவர் என்மேல் அவலத்தைக் கொண்டுவந்தார்” என்றாள். இவ்வாறு நகோமி தன் மருமகளான மோவாபிய பெண் ரூத்துடன் மோவாபிலிருந்து பெத்லெகேமுக்குத் திரும்பிவந்தாள். அப்பொழுது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.

ரூத் 1:19-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள். இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.

ரூத் 1:19-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள். ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார். நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள். இவ்வாறு நகோமியும் அவளது மருமகளான ரூத்தும் மலைநாடான மோவாபிலிருந்து திரும்பி வந்தனர். இரண்டு பெண்களும் பெத்லெகேம் வந்தபோது, யூதாவில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்