ரோமர் 9:16-33
ரோமர் 9:16-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார். ஏனெனில் இறைவன் பார்வோனுக்கு, “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்” என்று சொன்னார் எனறு வேதவசனம் கூறுகிறது. எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனை அப்படியே விட்டுவிடுகிறார். உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? யாரால் இறைவனுடைய திட்டத்தை எதிர்க்கமுடியும்?” என்று கேட்கலாம். அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுகிறதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா? ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா? அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்? இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார். இறைவன் யூதர்களிடமிருந்து மாத்திரமல்ல, யூதரல்லாதவர்களிடமிருந்தும் நம்மை அழைத்தார். இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே, “நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்; அன்பில்லாத ஒருத்தியை, ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்.” மேலும், “ ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். இது நிகழும் என்று இறைவன் சொல்லுகிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து, “இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப்போல் இருக்கிறது. ஆனால், மீதியாயிருக்கும் மக்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள். ஏனெனில் கர்த்தர் பூமியின்மேல் விரைவாகவும், மனத்திடத்தோடும் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.” ஏசாயா இன்னுமொரு இடத்தில் முன்னறிவித்திருக்கிறார், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு சந்ததிகளாக சிலரை விட்டுவைக்காதிருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம், நாங்கள் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.” அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். அது விசுவாசத்தின் மூலமாக வரும் நீதியே; ஆனால் இஸ்ரயேலரோ, நீதியின் சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சித்தும் நீதியைப் பெறவில்லை. அவர்கள் ஏன் அதைப் பெறவில்லை? அவர்கள் அதை விசுவாசத்தின்மூலமாய் அல்ல, தங்கள் செயல்களின் மூலம் கடைப்பிடிக்கவே முயற்சித்தார்கள். அப்படி அவர்கள், தடுக்கி விழப்பண்ணும் கல்லில் தடுக்கி விழுந்தார்கள். இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளபடியே நடந்தது: “இதோ, நான் மனிதர்களை இடறச்செய்யும் கல்லையும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையையும் சீயோனிலே வைக்கிறேன்; ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.”
ரோமர் 9:16-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும். மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.” இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.
ரோமர் 9:16-33 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. “நான் உன்னை ராஜாவாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்” என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார். “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம். இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார். “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும் ‘என் மக்களே’ என்றும், நேசிக்கப்படாது இருந்தவர்களையும், ‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’ என்று நான் அழைப்பேன். “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார். “இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது. எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள். ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.” “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு. எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார். அவர் அதனைச் செய்திருக்காவிட்டால் இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்.” என்று ஏசாயா சொன்னார். இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே. ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள். அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
ரோமர் 9:16-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.