ரோமர் 9:1-15

ரோமர் 9:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் கிறிஸ்துவுக்குள் உண்மையையே சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை; என்னுடைய மனசாட்சியும் பரிசுத்த ஆவியானவரால் இதை உறுதிப்படுத்துகிறது. என்னுடைய இருதயத்தில் பெரிதான துக்கமும், ஓயாத துயரமும் இருக்கின்றன. ஏனெனில் எனது சொந்த மக்களாகிய என்னுடைய யூத சகோதர சகோதரிகள் மீட்படைவதற்காக, முடியுமானால் நானே சபிக்கப்படவும் கிறிஸ்துவிலிருந்து விலக்கப்படவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். அவர்கள்தான் இஸ்ரயேல் மக்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் என்ற உரிமை அவர்களுடையதே; இறைவனுடைய மகிமை, உடன்படிக்கைகள், மோசேயின் சட்டத்தைப் பெற்றுக்கொள்ளுதல், ஆலய வழிபாடுகள், வாக்குத்தத்தங்கள் யாவும் அவர்களுடையதே. முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல. அதேபோல் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அவனுடைய உண்மையான பிள்ளைகளும் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. இதிலிருந்து மனித இயல்பின்படி பிறக்கின்ற பிள்ளைகள் இறைவனுடைய பிள்ளைகளல்ல என்பது தெரிகிறது. இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளே ஆபிரகாமுடைய சந்ததிகளாய் எண்ணப்படுகிறார்கள். ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது. இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள். ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்: அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது. ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை. ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார்.

ரோமர் 9:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது. சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே. அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே. அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே. அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே. இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி, மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.

ரோமர் 9:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென். நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான குமாரன்” என்று கூறினார். ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்” என்பது தான் தேவனுடைய வாக்குறுதி. அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. இரு குமாரர்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த குமாரன் இளையவனுக்கு சேவை செய்வான்” என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார்.

ரோமர் 9:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.