ரோமர் 8:22-30

ரோமர் 8:22-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இன்றுவரைக்கும் படைக்கப்பட்டவை எல்லாம் பிரசவ வேதனையால், புலம்பிக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அதுமாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட, பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பூரணத்துவத்தை, அதாவது உடலிலிருந்து மீட்புப் பெறுவதற்கு, ஆவலாகக் காத்திருக்கும்போது உள்ளான வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த எதிர்பார்ப்பில்தான் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தை நாம் இப்போது காண்போமானால், அது எதிர்பார்ப்பு அல்ல. யார்தான் தம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றை எதிர்பார்த்திருப்பார்கள்? ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம். அவ்வேளையில் பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவி செய்கிறார். நாம் எப்படி மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவிப்போடு, நமக்காகப் பரிந்து வேண்டுகிறார். நமது இருதயத்தை ஆராய்கின்ற இறைவன், பரிசுத்த ஆவியானவருடைய மனதையும் அறிவார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்துவேண்டுதல் செய்கிறார். இறைவனின் நோக்கத்தின்படியே அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கிறவர்களுக்கு அவர் எல்லாக் காரியங்களிலும் நன்மையுண்டாகும்படியே செயலாற்றுகிறார் என்பது நமக்குத் தெரியும். இறைவன் தாம் முன்னறிந்தவர்கள், தம்முடைய மகனின் தன்மையை ஒத்திருக்க வேண்டும் என முன்குறித்திருக்கிறார். பல சகோதரர் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படியே அவர் இப்படிச் செய்தார். இறைவன் முன்குறித்தவர்களை அவர் அழைத்தும், தம்மால் அழைக்கப்பட்டவர்களை, நீதிமான்களாக்கியும், நீதிமான்களாய் ஆக்கப்பட்டவர்களை தன்னுடன் மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

ரோமர் 8:22-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன? நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

ரோமர் 8:22-30 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும். தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.

ரோமர் 8:22-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.