ரோமர் 8:13-17

ரோமர் 8:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

ரோமர் 8:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள். ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களைத் திரும்பவும் பயத்திற்கு அடிமையாக்குகின்ற ஆவியைப் பெறவில்லை, ஆனால், உங்களை “பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற” பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அதனாலேயே நாம், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறோம். நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறார். நாம் இப்பொழுது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதானால் நாம் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் இறைவனுடைய உரிமையாளர்களாயும், கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம்.

ரோமர் 8:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.

ரோமர் 8:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள். எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.