ரோமர் 8:12-21
ரோமர் 8:12-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை. ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள். ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களைத் திரும்பவும் பயத்திற்கு அடிமையாக்குகின்ற ஆவியைப் பெறவில்லை, ஆனால், உங்களை “பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற” பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அதனாலேயே நாம், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறோம். நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறார். நாம் இப்பொழுது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதானால் நாம் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் இறைவனுடைய உரிமையாளர்களாயும், கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம். தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன். இறைவனுடைய மகன்கள் வெளிப்படுவதைக் காண படைக்கப்பட்டவை எல்லாமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன; இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
ரோமர் 8:12-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை. சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும். ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
ரோமர் 8:12-21 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள். எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும். இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ரோமர் 8:12-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.