ரோமர் 7:15-25

ரோமர் 7:15-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் செய்கிறதையே என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். நான் செய்ய விரும்பாததையே செய்வேனாகில், மோசேயின் சட்டம் நல்லது என்று நான் என் உள்ளத்தில் ஒத்துக்கொள்கிறேன். எனவே, உண்மையில் நான் வெறுக்கிறதையே செய்கிறது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே இதைச் செய்கிறது. என்னில், அதாவது என் மாம்ச இயல்பில், உண்மையாக நன்மை எதுவுமே குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. ஏனெனில், நன்மைசெய்ய வேண்டுமென்ற ஆசை என்னில் இருந்துங்கூட, அதை என்னால் செய்துமுடிக்க இயலாதிருக்கிறதே. நான் செய்ய விரும்புகிற நன்மையை நான் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, நான் செய்யவிரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கிறேன். நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்தது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அதைச் செய்கிறது. நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன். என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் என் உடலின் உறுப்புக்களிலோ இன்னொரு சட்டம் இயங்குகிறதைக் காண்கிறேன். அது என் உள்ளத்தில் இயங்கும் சட்டத்திற்கு எதிராகப் போராடி ஈடுபட்டு, என் உடல் உறுப்புகளில் இயங்குகின்ற பாவத்திற்கு என்னை அடிமைப்படுத்துகிறது. நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கிற இறைவனுக்கு நன்றி! நானோ என் உள்ளத்திலே இறைவனுடைய சட்டத்துக்கு அடிமையாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய மாம்ச இயல்பிலோ பாவத்திற்கே அடிமையாயிருக்கிறேன்.

ரோமர் 7:15-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே. எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை. எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன். உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன். ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

ரோமர் 7:15-25 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது. அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

ரோமர் 7:15-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்