ரோமர் 7:1-3

ரோமர் 7:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா? உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள். எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல.

ரோமர் 7:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள். ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.

ரோமர் 7:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.

ரோமர் 7:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.