ரோமர் 5:6-21
ரோமர் 5:6-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாருங்கள், நாம் பெலனற்றவர்களாய் இருக்கையிலே, பாவிகளாகிய நமக்காக குறித்தவேளையில் கிறிஸ்து மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் தனது உயிரைக் கொடுப்பது மிகவும் அரிது, ஆனால் ஒரு நல்ல மனிதனுக்காக யாராவது சிலவேளைகளில் சாகத் துணியலாம். ஆனால் இறைவன் தமது அன்பை நம்மேல் வைத்து, நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையிலேயே, கிறிஸ்து நமக்காக மரித்ததினாலேயே காண்பிக்கிறார். இப்பொழுதோ நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் அவராலே இறைவனுடைய கோபத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே, அவருடைய மகனின் மரணத்தினாலே நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்பொழுது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் ஜீவனினாலே நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! அதுமாத்திரமல்ல, இப்பொழுது இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், நாம் இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஒரே மனிதனின் மூலமாகவே உலகத்திற்குள் பாவம் நுழைந்தது. பாவத்தின் வழியாக மரணம் வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால், இவ்விதமாய் எல்லா மனிதர்மேலும் மரணம் வந்தது. மோசேயின் சட்டம் கொடுக்கப்படும் முன்னதாகவே, பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாதிருந்தபோது, அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆனால், மரணம் ஆதாமின் காலந்தொடங்கி, மோசேயின் காலம்வரை வாழ்ந்தவர்களை ஆளுகை செய்தது. ஆதாமுக்குக் குறிப்பிட்ட கட்டளையை அவன் மீறியதுபோல் பாவம் செய்யாதவர்களையும் மரணம் ஆட்சிசெய்தது. ஆதாமோ வரவிருந்த ஒருவருக்கு மாதிரியானான். ஆனால் இறைவனின் கிருபைவரத்திற்கும் ஆதாமின் மீறுதலுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. எப்படியெனில் ஒரே மனிதனுடைய மீறுதலின் காரணமாக அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய மகா கிருபையும், இன்னொரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்ற ஒரே மனிதரின் கிருபையினால் நமக்குக் கிடைக்கும் வரமும், அநேகர்மேல் அதிகமாய் நிரம்பி வழிகிறது. மேலும் இறைவனுடைய நன்கொடையின் விளைவோ, ஒரு மனிதனுடைய பாவத்தின் விளைவைப் போன்றதல்ல: அந்த நியாயத்தீர்ப்பு ஒரே பாவத்தினிமித்தம் தண்டனையைக் கொண்டுவந்தது; ஆனால் அந்த நன்கொடையோ பல மீறுதல்களை நீக்கி, நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது. ஒரே மனிதனின் மீறுதலினாலே, மரணம் ஆளுகை செய்தது. அப்படியானால் இறைவனுடைய கிருபையின் நிறைவைப் பெற்றவர்களும், கிருபைவரத்தின் நீதியைப் பெற்றவர்களும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனினாலே எவ்வளவாய் வெற்றியுள்ள வாழ்வை வாழ்வார்கள். ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானதுபோல, ஒரு நீதிச் செயலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் வாழ்வைக் கொண்டுவருகிற, நீதிமான்கள் என்ற தீர்ப்பு உண்டானது. ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள். அதிகரிக்கும் மீறுதல்களை புரிந்துகொள்ளும்படியாக மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அவரின் கிருபை இன்னும் அதிகமாய்ப் பெருகிற்று. மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது.
ரோமர் 5:6-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம். இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன். ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது. மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே. எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது. அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது. ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது.
ரோமர் 5:6-21 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார். ஒருவன் எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும், மிகச் சிலரே அவனது வாழ்வைப் பாதுகாப்பதற்காக தம் உயிரைக் கொடுப்பர். ஒருவன் மிக நல்லவனாக இருந்தால்தான் இன்னொருவன் அவனுக்காக உயிரைக் கொடுக்கிறான். ஆனால் நாம் பாவிகளாக இருக்கும்போதே நமக்காக கிறிஸ்து உயிரைவிட்டார். இதன் மூலம் தேவன் நம்மீதுகொண்ட பேரன்பை நிரூபித்துவிட்டார். கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாகிவிட்டோம். எனவே, மிக உறுதியாகக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவோம். நாம் தேவனுக்குப் பகைவர்களாக இருந்தபோது, தேவனோ கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மை நண்பர்களாக்கிக் கொண்டார். எனவே, இப்போது உறுதியாக நாமனைவரும் அவரது நண்பர்களே. தேவன் தனது குமாரனின் உயிர் மூலம் நம்மை இரட்சிப்பார். இப்போது நாம் இரட்சிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே தேவனிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் இயேசுவின் மூலமே நாம் தேவனுடைய நண்பர்களானோம். ஆதாம் என்கிற மனிதனின் செயலால்தான் உலகத்துக்குப் பாவம் வந்தது. பாவத்தோடு மரணமும் வந்தது. அதனால்தான் அனைவரும் தம் பாவத்தால் இறந்து போகிறார்கள். மோசேயின் சட்டங்களுக்கு முன்னரே உலகில் பாவம் ஏற்பட்டுவிட்டது. சட்டம் இல்லாததால் தேவன் மக்களை அவர்கள் பாவங்களுக்காகக் குற்றவாளி ஆக்கவில்லை. ஆனால் ஆதாம் காலத்திலிருந்து மோசே வரைக்கும் மரணமானது எல்லோரையும் ஆட்கொண்டது. தேவனுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் ஆதாம் மரணமுற்றான், ஆனாலும் ஆதாமைப்போல பாவம் செய்யாமலிருந்தும் பலர் மரணமடைந்தனர். பின்னால் வந்த இயேசுவைப் போன்றவனே ஆதாம். ஆனால் தேவனுடைய வரமானது ஆதாமின் பாவத்தைப் போன்றதல்ல. அந்த ஆதாமின் பாவத்தால் பலர் மாண்டு போனார்கள். ஆனால் தேவனிடமிருந்து பெற்ற கிருபையானது மிகவும் உயர்ந்தது. இயேசு கிறிஸ்து என்கிற ஒருவரின் கிருபையின் மூலமாகவே பலரும் தேவனுடைய வரத்தைப் பெற்றனர். ஒருமுறை ஆதாம் பாவம் செய்த பிறகு, அவன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் தேவனுடைய கிருபையோ வேறு தன்மையானது. இந்த வரம் மக்களை தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கிற்று. ஒருவன் செய்த பாவத்தால் மரணம் அனைவருக்கும் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சிலர் தேவனுடைய கிருபையை பெற்றார்கள். தேவனுடைய வரம் அவர்களை தேவனுக்கு வேண்டியவர்களாக்கியது. நிச்சயமாக அவர்கள் ஒரு மனிதரான இயேசு கிறிஸ்துவினாலே உண்மையான வாழ்வைப் பெற்று ஆளுவார்கள். எனவே ஆதாம் செய்த ஒரு பாவமானது மரணம் எனும் தண்டனையை அனைவருக்கும் தந்தது. அதுபோல் ஒரு மனிதரான இயேசுவின் நீதியானது அனைவரையும் நீதிமான்களாக்கும். அதோடு உண்மையான வாழ்வையும் அவர்களுக்குத் தந்தது. ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர். நியாயப்பிரமாணம் வந்த பிறகு பாவங்களும் அதிகரித்தன. மக்கள் மிகுதியாகப் பாவம் செய்யும்போது தேவனும் தமது கிருபையை அதிகமாகக் காட்டுகிறார். ஒரு முறை பாவம் ஆட்சி செய்து மரணத்துக்கு ஏதுவாயிற்று. இதே வழியில் கிருபையானது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
ரோமர் 5:6-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேகக் குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.