ரோமர் 4:18-22

ரோமர் 4:18-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ரோமர் 4:18-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான். அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை. இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான். தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான். இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.

ரோமர் 4:18-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான். எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ரோமர் 4:18-22 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” என்று சொன்னபடி ஆயிற்று. அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும், மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான். எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.”