ரோமர் 3:27-31

ரோமர் 3:27-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம். இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே. ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார். அப்படியானால், இந்த விசுவாசத்தின் மூலமாக, மோசேயின் சட்டத்தை ரத்து செய்கிறோமா? அதை நாம் மறக்கலாமா? ஒருபோதும் இல்லை. நாம் விசுவாசத்தினால்தான் மோசேயின் சட்டத்தை உறுதியாக்குகிறோம்.

ரோமர் 3:27-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே. எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம். தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான். விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

ரோமர் 3:27-31 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.

ரோமர் 3:27-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்