ரோமர் 3:22-31
ரோமர் 3:22-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை. ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள். இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார். இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார். ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம். இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே. ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார். அப்படியானால், இந்த விசுவாசத்தின் மூலமாக, மோசேயின் சட்டத்தை ரத்து செய்கிறோமா? அதை நாம் மறக்கலாமா? ஒருபோதும் இல்லை. நாம் விசுவாசத்தினால்தான் மோசேயின் சட்டத்தை உறுதியாக்குகிறோம்.
ரோமர் 3:22-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை. எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே. எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம். தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான். விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
ரோமர் 3:22-31 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார். எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.
ரோமர் 3:22-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.