ரோமர் 3:19-26

ரோமர் 3:19-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசேயின் சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம், மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் மவுனமாகும்படியாகவும் இவை எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு முழு உலகமும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயும் இருக்கிறார்கள். ஆகவே, மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதனால், ஒருவரும் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை; ஆனால், மோசேயின் சட்டத்தின் மூலமாக, நாம் பாவத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்கள் ஆகிறோம். இப்பொழுது மோசேயின் சட்டம் இல்லாமல், இறைவனிடமிருந்து வரும் வேறொரு நீதியை அறியமுடிகிறது. அதற்கு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் சாட்சியிடுகின்றன. இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை. ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள். இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார். இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.

ரோமர் 3:19-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது. அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை. எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

ரோமர் 3:19-26 பரிசுத்த பைபிள் (TAERV)

நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான். சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.

ரோமர் 3:19-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.