ரோமர் 16:5-27
ரோமர் 16:5-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள். என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக் குட்பட்டவர்களை வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள். பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ரோமர் 16:5-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியா பகுதியில் முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே. மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் மிகவும் கடுமையாக உங்களுக்காக உழைத்தாள். எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும் யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே இவர்கள் பெயர்பெற்றவர்கள். இவர்கள் எனக்கு முன்பே கிறிஸ்துவில் இருந்தவர்கள். கர்த்தரில் நான் நேசிக்கிற அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கிறிஸ்துவில் என் உடன் ஊழியனாய் இருக்கிற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். பரீட்சிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கிற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கர்த்தரில் இருக்கிற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கர்த்தரில் கடுமையாக உழைக்கிறவர்களான திரிபேனாளுக்கும். திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கர்த்தரில் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்குங்கூட என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ரூபசுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிந்துகொள்ளப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள். அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடிருக்கிற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள்ளான எல்லாத் திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக்கொண்டவற்றிற்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, உங்கள் வழியில் இடறல்களை ஏற்படுத்துகிறவர்களைக்குறித்துக் கவனமாய் இருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். அவர்களைவிட்டு விலகியிருங்கள். ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவுக்குப் பணிசெய்கிறவர்கள் அல்ல. ஆனால் தங்கள் வயிற்றுப் பிழைப்பையே பார்த்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், நயவஞ்சகத்தாலும் கபடற்ற மக்களின் மனங்களை ஏமாற்றுகிறார்கள். உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இதனால் நான் உங்களைக்குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறேன்; ஆனால் நீங்கள் நன்மை எது என்பதைக்குறித்து ஞானமுள்ளவர்களாய் இருப்பதும், தீமையைப் பொறுத்தவரையில் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களைப்போல் இருப்பதுமே என் விருப்பம். சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழேபோட்டு நசுக்கிப்போடுவார். நமது கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும். என் உடன் ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அவனுடைய வீட்டிலே நான் தங்கியிருக்கிறேன். இங்குதான் திருச்சபையும் கூடுகிறது. இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களெல்லாரோடும் இருப்பதாக. ஆமென். கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
ரோமர் 16:5-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும், யூனியாவையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள். என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள். பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென். என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். என்னையும், சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும், தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ரோமர் 16:5-27 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள். ஆசியாவிலே முதலில் கிறிஸ்துவைப் பின்பற்றியவனாகிய எப்பனெத் என்ற அந்த நண்பனையும் வாழ்த்துங்கள். மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள். அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள். அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன். உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன். எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள். அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன். நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள். திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர். எனது அன்புமிக்க தோழியாகிய பெர்சியாளை வாழ்த்துங்கள். அவளும் கர்த்தருக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தாள். ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான். அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள். பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள். ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகின்றனர். சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள். அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர். உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும். சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென். என்னோடு ஊழியம் செய்கிற தீமோத்தேயு உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறான். லூகியும், யாசோன், சொசிபத்தர் போன்ற எனது உறவினர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள். பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார். தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.