ரோமர் 15:17-22

ரோமர் 15:17-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன். வேறொருவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் நான் கட்டக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே, நற்செய்தியை அறிவிப்பதே எப்பொழுதும் என் விருப்பமாயிருக்கிறது. வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: “அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” இதன்படியே நான் இப்படிச் செய்தேன். இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.

ரோமர் 15:17-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன். உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.

ரோமர் 15:17-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால், “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள். அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.

ரோமர் 15:17-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.