ரோமர் 13:8-14
ரோமர் 13:8-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யாருக்கும் கடன்காரராய் இருக்கவேண்டாம். ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துவதில் மட்டுமே எப்பொழுதும் கடன்பட்டவர்களாய் இருங்கள். ஏனெனில் தன்னில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால், நீங்கள் மோசேயின் சட்டத்தையே நிறைவேற்றுகிறீர்கள். “விபசாரம் செய்யாதே,” “கொலை செய்யாதே,” “களவு செய்யாதே,” “அயலானுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே,” என்கிற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், “நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலவனிலும் அன்பாயிரு” என்கிற ஒரே கட்டளையில் அடங்குகின்றன. அயலவனில் அன்பு செலுத்துகிறவன் பிறருக்குத் தீங்கு செய்யமாட்டான். ஆகவே, அன்பே மோசேயின் சட்டத்தை முழுநிறைவாக்குகிறது. தற்போதைய காலத்தை விளங்கிக்கொண்டவர்களாய் இவைகளைச் செய்யுங்கள். உங்கள் தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நாம் முதலில் விசுவாசிக்கத் தொடங்கிய காலத்தைவிட, நமது இரட்சிப்பு இப்பொழுது இன்னும் அருகே வந்துவிட்டது. இரவு முடியப்போகிறது; பகல் வந்துவிட்டது. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு அகற்றி, ஒளியின் ஆயுதத்தை அணிந்துகொள்வோம். பகலில் நடப்பவர்களைப்போல் நாம் ஒழுக்கமாய் நடப்போம். களியாட்டங்களையும், வெறியாட்டங்களையும், பாலிய முறைகேடுகளையும், ஒழுக்கக்கேடான செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவோம். மாறாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே அணிந்துகொண்டு, உங்கள் மாம்ச இயல்பிலிருந்து வரும் ஆசைகளை திருப்திப்படுத்துவதெப்படி என்ற சிந்தனையை விட்டுவிடுங்கள்.
ரோமர் 13:8-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது. அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது. இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம். தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
ரோமர் 13:8-14 பரிசுத்த பைபிள் (TAERV)
எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” என்று ஒரு விதியையே சொல்கின்றன. அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது. நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
ரோமர் 13:8-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.