ரோமர் 12:9-16
ரோமர் 12:9-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்கவேண்டும். தீமையை வெறுத்து விடுங்கள்; நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள், ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாக இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள். தேவையிலிருக்கிற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; சபிக்காதிருங்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். ஒருவரோடு ஒருவர் ஒருமனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள்.
ரோமர் 12:9-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள். சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள். ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.
ரோமர் 12:9-16 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.
ரோமர் 12:9-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.