ரோமர் 12:6-11

ரோமர் 12:6-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே, நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கிறோம். இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம்பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும். அப்படியே சேவைசெய்கிறவன் சேவை செய்வதிலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், உற்சாகப்படுத்துகிறவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகிறவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் கவனத்தோடு நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும். உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்கவேண்டும். தீமையை வெறுத்து விடுங்கள்; நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள், ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

ரோமர் 12:6-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும். ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும். உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

ரோமர் 12:6-11 பரிசுத்த பைபிள் (TAERV)

நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக! உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள்.

ரோமர் 12:6-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்