ரோமர் 12:17-21

ரோமர் 12:17-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்யவேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள். இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாக இருங்கள். என் அன்பானவர்களே, பழிக்குப்பழி வாங்கவேண்டாம், இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்” என்று எழுதியிருக்கிறதே. எனவே, “உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்; தாகமாயிருந்தால், அவனுக்கு குடிக்கக் கொடுங்கள். இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.” தீமை உங்களை மேற்கொள்ள இடங்கொடுக்க வேண்டாம். தீமையை நன்மையினால் மேற்கொள்ளுங்கள்.

ரோமர் 12:17-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள். பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள். அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.” நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

ரோமர் 12:17-21 பரிசுத்த பைபிள் (TAERV)

யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள். “நானே தண்டிக்கிறேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது. “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால் அவனுக்கு உணவைக் கொடுங்கள். அவன் தாகமாய் இருந்தால் அவன் குடிக்க ஏதாவது கொடுங்கள். இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.” பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.

ரோமர் 12:17-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.