ரோமர் 1:18-25

ரோமர் 1:18-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தங்களுடைய தீமையினாலே மனிதர்கள் சத்தியத்தை அடக்கி ஒடுக்குகிறார்கள். பக்தியில்லாமை மற்றும் தீமை இவை எல்லாவற்றிற்கும் விரோதமாக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபம் வெளிப்படுத்தப்படுகிறது. ஏனென்றால், இறைவனைப்பற்றி அறியக்கூடியவை அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதை இறைவனே அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் இறைவனை அறிந்தும்கூட, அவரை இறைவனாக மகிமைப்படுத்தவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மாறாக அவர்களுடைய சிந்தனை பயனற்றதாகி, அவர்களுடைய உணர்வற்ற இருதயங்கள் இருளடைந்தன. தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் மூடர்கள் ஆனார்கள். அவர்கள் அழியாமையுடைய மகிமையான இறைவனை வழிபடாமல், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களில் செய்யப்பட்ட அழிந்துபோகும் சிலைகளை வழிபட்டனர். ஆகவே இறைவன் அவர்களை அவர்களுடைய பாவ ஆசைகளுக்கு விட்டுவிட்டார். எனவே அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான பாலுறவுகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.

ரோமர் 1:18-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

ரோமர் 1:18-25 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள். தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார். தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது. தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது. மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள். மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர். தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென்.

ரோமர் 1:18-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.