வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக, ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம் நின்றது. அவர்களை எண்ணிக் கணக்கிட, யாராலும் முடியாதிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும், பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும் வந்த அவர்கள், அரியணைக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை அங்கி உடுத்திக்கொண்டு, தங்களுடைய கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும் நின்றார்கள். அவர்கள் உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னதாவது: “இரட்சிப்பின் மகிமை அரியணையில் அமர்ந்திருக்கும் எங்கள் இறைவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது.” அப்பொழுது அரியணையைச் சுற்றியும், சபைத்தலைவர்களைச் சுற்றியும், நான்கு உயிரினங்களைச் சுற்றியும், நின்றுகொண்டிருந்த எல்லா இறைத்தூதர்களும், அரியணைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” அப்பொழுது, அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெள்ளை உடை உடுத்தியிருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அப்பொழுது அந்த மூப்பன் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள்.” அதனாலேயே, “இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து, அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள்; அரியணையில் அமர்ந்திருக்கிற அவர், அவர்களுடன் குடியிருந்து, பாதுகாப்பாய் இருப்பார். அவர்கள் இனியொருபோதும், பசியாயிருக்கமாட்டார்கள்; இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவுமாட்டார்கள். வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ, அவர்களைத் தாக்காது. ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார்; ‘அவர் அவர்களை வாழ்வுதரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’ ‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் எல்லாவற்றையும் துடைத்துவிடுவார் என்றான்.’ ”

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன். அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள். எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார். இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை. சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர். அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர். பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன். அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17

வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 TAOVBSIவெளிப்படுத்தின விசேஷம் 7:9-17 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்