வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17

வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது, அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெள்ளை உடை உடுத்தியிருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அப்பொழுது அந்த மூப்பன் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள்.” அதனாலேயே, “இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து, அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள்; அரியணையில் அமர்ந்திருக்கிற அவர், அவர்களுடன் குடியிருந்து, பாதுகாப்பாய் இருப்பார். அவர்கள் இனியொருபோதும், பசியாயிருக்கமாட்டார்கள்; இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவுமாட்டார்கள். வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ, அவர்களைத் தாக்காது. ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார்; ‘அவர் அவர்களை வாழ்வுதரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’ ‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் எல்லாவற்றையும் துடைத்துவிடுவார் என்றான்.’ ”

வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள். எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார். இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை. சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன். அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”

வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.