வெளிப்படுத்தின விசேஷம் 5:1-13
வெளிப்படுத்தின விசேஷம் 5:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச்சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு வல்லமையுள்ள தூதன், “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச்சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் சொல்லிக்கொள்வதை நான் கண்டேன். ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ அல்லது பூமியின்கீழோ அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ ஒருவராலும் இயலவில்லை. அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லையே என்று நான் மிகவும் அழுதேன். அப்பொழுது அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ பார், யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமாய் இருக்கிறவர், வெற்றி பெற்றிருக்கிறார். அவர் புத்தகச்சுருளையும், அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு ஜெயம் பெற்றவராய் இருக்கிறார்” என்றான். பின்பு நான், கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன்; அவர் இப்பொழுது நான்கு உயிரினங்களாலும் அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களாலும் சூழப்பட்டு, அரியணையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அந்த ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்த ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள். ஆட்டுக்குட்டியானவர் வந்து, அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டார். அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள். அந்தச் சபைத்தலைவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள்: “நீர் அந்தப் புத்தகத்தை எடுக்கவும், அதன் முத்திரைகளைத் திறக்கவும் தகுதியுள்ளவர். ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். உம்முடைய இரத்தத்தினாலே மனிதர்களை ஒவ்வொரு பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இறைவனுக்கென்று விலைகொடுத்து வாங்கிக்கொண்டீர். நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்; அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.” பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அநேக இறைத்தூதர்களின் குரலைக் கேட்டேன்; இறைத்தூதர்களோ, எண்ணிக்கையில் ஆயிரம் ஆயிரமாகவும், பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தார்கள். அவர்கள் அந்த அரியணையையும், அந்த உயிரினங்களையும், அந்த சபைத்தலைவர்களையும் சுற்றி நின்றார்கள். அவர்கள் உரத்த குரலில்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும், செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், கனத்தையும், மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!” என்று பாடினார்கள். பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக!”
வெளிப்படுத்தின விசேஷம் 5:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன். புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன். வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது. ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார். அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து: “தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது. அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
சிம்மாசனத்தின்மேல் உட்கார்ந்திருப்பவரின் வலதுகைப் பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தோல் சுருளைக் கண்டேன். அதில் இருபக்கமும் எழுதப்பட்டிருந்தது. அது மூடி வைக்கப்பட்டு ஏழு முத்திரைகளும் இடப்பட்டிருந்தன. ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து “இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்?” என்று கேட்டான். ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ, பூமிக்கு அடியிலோ இருக்கிற எவரும் இதுவரை அம்முத்திரைகளை உடைத்து திறந்து உள்ளே பார்க்க இயலவில்லை. எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன். ஆனால் முதியவர்களுள் ஒருவர் என்னிடம், “அழாதே! யூதர் குலத்தில் பிறந்த சிங்கமான இயேசு வெற்றி பெற்றார். அவர் தாவீதின் வழி வந்தவர். அவர் ஏழு முத்திரைகளையும் உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவர்.” பிறகு ஒரு ஆட்டுக்குட்டி சிம்மாசனத்தின் மத்தியில் நிற்பதைக் கண்டேன். அதனைச் சுற்றி நான்கு ஜீவன்களும் இருந்தன. மூப்பர்களும் அதனைச் சுற்றி இருந்தனர். அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டது போல தோன்றியது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும். அவை உலகமெங்கும் அனுப்பப்பட்டவை. அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது. உடனே உயிர் வாழும் ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் அந்த ஆட்டுக் குட்டியைப் பணிந்து வணங்கினர். ஒவ்வொருவரிடமும் ஒரு இசைக்கருவி இருந்தது. அதோடு தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் அவர்கள் பிடித்திருந்தனர். அத்தூபவர்க்கங்கள் நிறைந்த பொற்கலசங்கள் தேவனுடைய பரிசுத்தமான மக்களின் பிரார்த்தனைகளைக் குறிக்கின்றன. அவர்கள் அந்த ஆட்டுக்குட்டிக்காகப் புதிய பாடலைப் பாடினர். “தோல் சுருளை எடுக்க நீரே தகுதியுள்ளவர். அதன் முத்திரைகளையும் நீரே உடைக்கத்தக்கவர். ஏனென்றால் நீர் கொல்லப்பட்டவர் உம் குருதியால் தேவனுக்காக மக்களை மீட்டுக்கொண்டவர். அவர்கள் பல்வேறு இனத்தை, மொழியை, நாட்டை, குழுவைச் சேர்ந்தவர்கள். நீர் நம் தேவனுக்காக ஒரு இராஜ்யத்தையும், ஆசாரியர்களையும் உருவாக்கினீர். அவர்கள் இந்த உலகத்தை ஆளுவார்கள்.” பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது. அந்தத் தூதர்கள் உரத்த குரலில் கீழ்க்கண்டவாறு பாடினார்கள். “கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவரே வல்லமையை, செல்வத்தை, ஞானத்தை, பலத்தை, புகழை, மகிமையை, பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.” பிறகு பரலோகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும், பூமியிலும் கடலிலும் பூமிக்கு அடியிலுள்ள உலகிலுமுள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும் கீழ்க்கண்டவாறு சொல்வதைக் கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.